Monday, December 23, 2024
Home > கேள்விபதில் > தொழில்நுட்பம் வரமா? சாபமா? – #கேள்விபதில் – 17

தொழில்நுட்பம் வரமா? சாபமா? – #கேள்விபதில் – 17

கேள்வி: தொழில்நுட்பங்கள் வரமா? சாபமா? தயவு கூர்ந்து மலுப்பலான பதில் வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

– பெயர் கூற விரும்பாத வாசகர்

பதில்:

இந்த கேள்வி மிக மிக அடிப்படையான கேள்வி. ஆகவே, இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் கூறுவது கடினம். இன்றைய நவீன தொழில்நுட்பங்களால் நாம் நிறைய நன்மைகளையும், நிறைய தீமைகளையும் அனுபவித்திருக்கிறோம். தொழில்நுட்பங்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி. வரமும், சாபமும் கலந்தே இருக்கும். மலுப்பலான பதில் வேண்டாமே என்று அந்த வாசகர் கேட்டதனால் இந்த கேள்வியை, முதலில் தவிர்த்துவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு கட்டுரையை ஒரு ஆங்கில தினசரியில் வாசிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரை, தொழில்நிட்பங்களின் தாக்கத்தை விவாதிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதனை படித்துக் கொண்டிருந்தபொழுது தான், இந்தக் கேள்விக்குப் பதில் எழுத நேர்ந்தது.

வாசகர் கேட்ட கேள்விக்கு மனித குல வரலாற்றையே ஆராய வேண்டும். அந்த அளவிற்கு அழமான கேள்வி இது. அதனால், எங்கிருந்து துவங்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு எல்லோருக்கும் பதில் தெரிந்தே இருக்கும். ஆகவே முதலில் பதிலை சொல்லிவிடுகிறேன்.  இந்தக் கேள்விக்கு நேரடியான பதில், தொழில்நுட்பம் ஒரு வரமே. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள், தொழில்நுட்பம் ஒரு வரம். 

ஆனால்…

அதான், கேள்விக்கு பதில் சொல்லிவிட்டாயே, மீண்டும் என்ன, ஆனால்? என்று ஆரம்பிக்கிறாய் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தக் கேள்விக்கு வரம் என்று பதில் செல்வது எளிது. நம்மை எல்லோரும் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கிறோம். இப்படியான நிலையில் தொழில்நுட்பம் வரமா? சாபமா? என கேள்வி எழுந்தால் நிச்சயம் அதில் வரமே என்ற சார்புத்தன்மை இருக்கும். அதே சமயம், தொழில்நுட்பம் ஒரு சாபக்கேடு என்று பதில் சொல்வது மிக எளிது. ஆனால் அதனை நிரூபிக்க முடியாது. அதற்குக் காரணமும் அதே தொழில்நுட்பம் தான். இந்தக் குழப்பத்திற்கான பதில், ஒரு தொழில்நுட்பத்தில் கடைசி பயனாளி யார் என்பதனைப் பொருத்தே இருக்கிறது. உங்களுக்கான சில உதாரணங்கள் இதோ,

  • பிளாஸ்டிக் என்பது பெட்ரோலியக் கழிவுகளில் இருந்து நமக்குக் கிடைத்தம் வரப்பிரசாதம். அதன் வருகைக்குப் பிறகு உலோக பயன்பாடு பெரிய அளவில் குறைந்தது. அதே சமயம், பிளாஸ்டிக் மூலமாக குறைந்த செலவில், தரமான உதரி பாகங்கள் தயாரிக்க முடிகிறது. ஆக, பிளாஸ்டிக் ஒரு வரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதே பிளாஸ்டிக், ஒரு பையாக, கேரிபேகாக மாறும் பொழுது அது சாபமாக முடிந்துவிடுகிறது. ஒரு நாள் அந்த பிளாஸ்டிக் பைகளை மறு சுழற்சி செய்து, அவை மூலம் சாலைகள் அமைக்க உதவினால், அது வரமாக அமையலாம். ( இந்த தொழில்நுட்பம் சாத்தியம் என ஆராய்ச்சிகளின் முடிவுகள் உணர்ந்துகின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு வந்தால் நல்லது. )
  • அணுசக்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் என்பது மனித குல வரலாற்றில் ஒரு மணி மகுடம். அது ஒரு வரம் என்றே வைத்துக்கொள்வோம் ( ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அவையெல்லாம் அதன் பாதுகாப்புத் தன்மையை கேள்விக்கு ஆட்படுத்துபவையே தவிர, அந்த தொழில்நுட்பத்தையே கேள்விக்கு ஆட்படுத்துபவையல்ல. ) ஆனால், அணுசக்தி தயாரிக்க உதவும் அணு மின் நிலையத்தின் கழிவுகளில் இருந்து கிடைக்கும் செறியூட்டப்பட்ட யூரேனியம் தானே அணு ஆயுதங்களாக மாறுகிறது. ஆக, அணுமின் சக்தி வரமாக இருக்கும் பொழுது, அதன் விளைவாகக் கிடைக்கும் ஒரு தொழில்நுட்பம் சாபமாக மாறுகிறது.
  • தூரத்தில் இருக்கும் நண்பர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் முகம் பார்த்துப் பேச இன்று தொழில்நுட்பம் இருக்கிறது. முகநூலில், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என சமூக ஊடகங்கள் நம் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்யும் அதே நேரத்தில், நாம் செய்தித்தாள்களையும், புத்தகங்களையும், வாசிக்க கூட நேரமில்லாது நட்பு வட்டத்தை தக்க வைக்க மட்டுமே முயன்றுக் கொண்டிருக்கிறோம். நம்மை வீட்டை விட்டும், அலுவலக நினைவுகளை விட்டும், வெளிக் கொண்டுவர போக்கிமான் கோ என்ற விளையாட்டு தேவைப்படுகிறது. இது ஆரோக்கியமான போக்காக தெரியவில்லை. ஆனால் இது சில காலம் தான். விரைவிலே இதிலும் மாற்றம் வரும்.

ஆக, ஒரு தொழில்நுட்பம் என்பது யாரை சென்று சேர்கிறது என்பதன் அடிப்படையிலே தான் அதன் தாக்கவும், வரமா? சாபமா? என்ற கேள்விக்கான விடையும் ஒழிந்திருக்கிறது. வேட்டையாட தளவாடங்கள் உருவாக்கியதும் தொழில்நுட்பம் தான். கற்களை உரசினால் நெருப்பை உண்டாக்க முடியும் என்பதும், சக்கரம் கண்டுபிடித்ததும், தண்ணீரை கட்டுப்படுத்தி விவசாயம் செய்ததும் என எல்லா வகையிலும் நமக்கு தொழில்நுட்பம் வளர்ச்சியையே கொடுத்துள்ளது. சில தொழில்நுட்பங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் அவை தீமைகளை கடந்து வந்துவிடும். உண்மையில் தொழில்நிட்பம் என்பது ஒரு மாற்றம். அது மாறிக்கொண்டே இருக்கும். யாராலும் அதனை தடுக்க முடியாது. வரமா? சாபமா? என்ற விவாதமும் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும். அதனையும் யாராலும் தடுக்க முடியாது. தொழில்நுட்பங்களைக் கையாள மனிதன் கற்றுக் கொண்டுவிட்டான். ஆகவே எது சரி, எது தவறு, என்பதனை அவன் விரைவில் கற்றுக் கொள்வான். தொழில்நுட்பங்களில், வரமாக தெரிவது சாபமாகவும், சாபமாகத் தெரிவது வரமாகவும் மாறிக் கொண்டேயிருக்கும்.

– மாற்றம் ஒன்று தான் மாறாதது.

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
RajaGuru
5 years ago

Sure