கேள்வி: தொழில்நுட்பங்களை நாம் சரியாக வகையில் நுகர்கிறோமா?
– தோழி. தி.பா.
பதில்:
இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி செய்திகளை, நாளிதழ்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நாளிதழ்களில் எந்த பக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, போர், ஜாதிச் சண்டைகள், மதச் சண்டைகள் என வன்முறைக் களமாகவே காட்சியளிக்கின்றன. 24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகளிலும் அதே நிலைதான். என்ன ஒரு சின்ன வித்தியாசம். நாளிதழ்களில் இரத்தக் கறை இருக்காது, ஆனால் தொலைக்காட்சிகளில் இரத்தம் சிந்திக் கிடப்பதையும் காண்பிப்பார்கள். மேலே சொன்ன குற்றங்கள் எங்கோ நடப்பதைப் போல இல்லை. அனுதினமும் நம்மைச் சுற்றியே நடப்பதைப் போல இருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களின் மூலமாக தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும், இணையம் மூலமாக மொபைல்களிலும் நம்மிடம் தேவையற்ற செய்திகளாக அவை வந்துச் சேர்கின்றன.
பெரும்பாலும், ஒருவன் ஒரு குற்றத்தைச் செய்ய தானாக யோசிப்பதைவிட திரைப்படத்தாலும், இணையத்திலும், வாட்ஸ்ஆப், மூகநூல் போன்றவற்றில் பகிரப்படும் வீடியோக்களின்(காணொளிகள்) மூலமாக கவரப்பட்டுத் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். இது வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கப்போகிறது. இப்போது சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் நடக்கும் யுத்தத்தில் பங்கேற்க கிளம்பிய இளைஞர்களில் பல பேர் வீடியோகேம் விளையாடுவதைப் போல போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அவர்கள் வீடியோகேம் விளையாடிய அனுபவம் அவர்களை வன்முறையை நோக்கி அவர்களைத் தள்ளியிருக்குமோ என அஞ்சுகிறேன்.
நாம் பயன்படுத்தும் வீடியோகேம், மொபைல், கணினி, லேப்டாப், இணையம் போன்ற எல்லா தொழில்நுட்பங்களுமே முதன் முதலில், இரணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப் பட்டவையே. அதனால் தான் என்னவோ அதில் அதிக நேரத்தைச் செலவிடும் இக்கால குழந்தைகளும் அதிக வன்முறை எண்ணங்களோடு வளர்கின்றனர் போல. அது, மேலும் பல குழந்தைகளை தன் ஆளுகைக்குக் கீழ் வரச் செய்துக் கொண்டிருக்கிறது.
போக்கிமான் கோ, என்ற ஒரு விளையாட்டு இன்றைக்கு பல இளைஞர்களை மொபைல் மூலமாக நடுவீதிக்கு கொண்டு வந்து அங்கும் இங்கும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டினால் கனடா நாட்டில் இரண்டு பேர் தங்கள் நாட்டின் எல்லையையே தாண்டிவிட்டார்களாம். இதனை தீயவர்களும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எந்நேரமும் அவர்களும் இது போன்ற ஒரு விளையாட்டை உருவாக்கி அதன் மூலமாக நாச வேலையை செய்ய காத்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டிகளிடம் பேச தயங்கும் குட்டிச் சுட்டிக் குழந்தைகள் கூட மொபைலில் இருக்கும் பூனையுடன் (Talking Tom) மணிக் கணக்கில் பேசுகிறார்கள். இரண்டு, மூன்று வயது குழந்தைகள் கூட தங்களது பெற்றோரின் மின்னனு பொருட்களை எளிதில் பயன்படுத்தும் காலத்தில் நாம் இருக்கிறோம். இதில் தவறில்லை. ஆனால், இதனால் எதிர்காலத்தில் பெரிய விலைக் கொண்டுக்க வேண்டி இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. காரணம் அவர்கள் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்கால குழந்தைகளுக்கு விளையாட்டு என்றாலே மொபைலில் விளையாடுவது என்றாகிவிடுமோ? இப்படியே வளரும் குழந்தைக்கு எப்படி பொது வெளியில் நடந்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாமலே போய்விடவும் வாய்ப்புகள் உண்டு. இது இக்கால இளைஞர்களுக்கும் பொருந்தும் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் தொழில்நுட்பங்களை குற்றம் சொல்லவில்லை. நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது, தேவையற்ற தொழில்நுட்ப நுகர்வைப் பற்றி தான்.
தேவையற்ற தொழில்நுட்ப நுகர்வைப் பற்றிய சில பார்வைகள்…
- பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் ஏதேனும் பேச வேண்டுமானால் கூட அதனை கேட்க குழந்தைகளுக்கு நேரமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. அவர்கள் எப்போது தொலைக்காட்சியிலோ, கணினியிலோ, டேப்லட்டிலோ, மொபைலிலோ எதேனும் பார்த்துக் கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருக்கிறார்கள். அவர்களின் முழு கவனமும் அதன் மீது மட்டும் தான் இருக்கிறது.
- நம் பேருந்துகளிலோ, இரயில்களிலோ பயணிக்கும் பொழுது கூட நம் அருகில் இருப்பவர் கூட பேச முடியவில்லை. அப்படியே பேச நேர்ந்தாலும், அது நாம் அடிமையாக இருக்கும் எதேனும் தொழில்நுட்பங்களைப் பற்றியதாகவே இருக்கிறது. அப்படி கிடைக்கும் அறிமுகம் கூட தொழில்நுட்பங்களைச் சுற்றியே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
- பேருந்தில் நடத்துனர் பயணச்சீட்டைக் கொடுக்கும் பொழுது புன்முறுவல் செய்தால் பதிலுக்கு புன்னகைக்க மறுக்கும் நம் உதடுகள், வாட்ஸ்ஆப்பிலோ, முகநூலிலோ பகிரப்படும் ஒவ்வொரு புகைப்படத்தைப் பார்த்து புன்னகைக்க மறப்பதில்லையே. இந்தக் காட்சியைப் பார்க்கும் நடத்துனர் என்ன மன வேதனையடைந்திருப்பார். ஒரு புகைப்படத்துக்கு கிடைக்கும் மரியாதைக் கூட தனக்கு கிடைக்கவில்லையே என நொந்துப் போயிருப்பார். ஒவ்வொரு முறை தொழில்நுட்பததை நாம் பயன்படுத்தும் போதும், நம் கண்களுக்குத் தெரியாத யாரையேனும் நாம் மன வேதனையடையச் செய்கிறோம் என்பதனை நாம் மறக்கக் கூடாது.
- போக்கிமான் கோ என்னும் விளையாட்டு என் சுற்றத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது என முகநூலில் ஒருவர் பதிவிட்டால் அதற்கு 300 லைக்ஸ் கிடைக்கிறது. ஆனால் மூன்று தெரு மட்டுமே இருக்கும் தன் சுற்றத்தை அறிந்துக் கொள்ள அவனுக்கும் ஜப்பானில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்க வேண்டிருக்கிறது. என்ன நடக்கிறது நம் நாட்டில்? உலகைச் சுற்றிய மனிதனை, இன்று ஒரு செயலி இன்று ஊர் சுற்ற வைக்கிறதே. என்ன கொடுமை.
- இன்னொருவர், போக்கிமான் கோ விளையாட்டுச் செயலி, என் பக்கத்துத் தெருவில் இருக்கும் ஒரு பூங்காவை எனக்கு கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது என்று முகநூலில் பதிவிடுகிறார். மூன்று வருடமாக இங்கே இருந்தும் எனக்குத் தெரியாத இந்தப் பூங்கா, இந்த விளையாட்டுச் செயலியால் எனக்கு மூன்றே நிமிடத்தில் கண்டுபிடித்தேன் என்கிறார், அந்த புண்ணியவான். அவருக்கும் 300 லைக்ஸ் கிடைக்கிறது. ஆனால் 300 அடி நடந்தால் பக்கத்துத் தெருவில் இருக்கும் பூங்காவை அவர் எப்போதோ கண்டுபிடித்திருக்கலாமே? இதிலிருந்து என்ன தெரிகிறது. சுற்றத்தில் என்ன இருக்கிறது என்பதனை அறிய அவருக்கு விருப்பமேயில்லை. ஒரு செயலி அவருக்கு அந்த ஆர்வத்தை தூண்டியவுடன், அதனை புகழ்கிறார். என்ன முட்டாள் தனம்.
- நாம் எங்கே இருக்கிறோம், நம்மைச் சுற்றி என்னவெல்லாம் இருக்கின்றன போன்ற அதிமுக்கியமான, அடிப்படையான செய்திகளைக் கூட தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்க தெரியாத நிலையில் தான் எல்லோரும் இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் நமக்கு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. நடக்கக் கூட.
- இங்கே இன்னொரு முக்கியமான அம்சம் விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. அது, நமக்கான சரியான தொழில்நுட்பத்தை நாம் தேர்ந்தேடுக்கிறோமா? என்பதே. நமக்கான சரியான தொழில்நுட்பத்தை நம் தேர்தேடுக்கும் வசதி மிக மிக குறைவு. மேலும், நமக்கான தொழில்நுட்பங்களை நாமே வடிவமைத்து, உருவாக்கி, செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதும் எட்டாக்கனியாக உள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பங்களின் பிரதான வடிவமைப்பு நாம் அதற்கு அடிமையாக மாற்றும் படியாகவே அமைந்திருக்கிறது. இப்படியான சுழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம், நமக்கான தொழில்நுட்பங்களை சரியான வகையில் தேர்தேடுக்காவிடில் நிச்சயம் பேராபத்து தான்.
- மேலும், முகநூல், வாட்ஸ்ஆப், இணையம், விளையாட்டுச் செயலிகள், தொலைக்காட்சி, என்னற்ற மின்னனு சாதனங்கள் போன்ற எல்லா தொழில்நுட்பங்களுமே வருடந்தோரும் இலட்சக்கணக்கான அடிமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. இந்த அடிமைகளே மன நோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆக நமக்கான தொழில்நுட்பத்தை தேர்ந்தேடுப்பதில் நம் இன்னும் நிறைய கவனம் செலுத்த வேண்டும் என்பதனையே இது காட்டுகிறது.
கடைசியாக,
தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு தேவையா? தேவையில்லையா? என்ற கேள்வி எனது கருத்துக்களின் மூலம் எழலாம். அந்த கேள்விக்கு என்னுடைய பதில் அவசியமான தொழில்நுட்பங்கள் மட்டுமே நமக்குத் தேவை என்பதே. மற்ற எல்லா தொழில்நுட்பங்களும் தேவையற்றதே. அது முகநூலாக இருந்தாலும் சரி, மொபைலாக இருந்தாலும் சரி, வாட்ஸ்ஆப்பாக இருந்தாலும் சரி, கணினியாக இருந்தாலும் சரி, இணையமாக இருந்தாலும் சரி. நமக்கு ஒரு தொழில்நுட்பம் தேவையில்லை என்று பட்டாலோ, அதற்கு நாம் அடிமையாக இருப்பதைப் போன்று உணர்ந்தாலோ அதனை தூக்கி எறிய நாம் தயங்கக்கூடாது. அதேசமயம் நம் கருத்தை மற்றவர்களின் மேல் திணிக்கக்கூடாது. என்னுடைய கருத்தில் பல பேருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கெல்லாம் நான் செல்ல விரும்புவதெல்லாம் இதோ,
தொழில்நுட்பங்கள்யாவும் மனித வளர்ச்சிக்காக தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என நினைக்கும் எல்லோரும் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அம்சம் ஒன்று இருக்கிறது. அது, இன்றைய உலகில் பரவலாக இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களின் பின்னாலும் ஒரு லாப நோக்கம் இருக்கிறது. அந்த லாபத்திற்காகத் தான் அந்த தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகிறது. அந்த லாப நோக்கமே, நம்மை அந்த தொழில்நுட்பங்களிடம், நம்மை அடகு வைக்கத் தூண்டுகிறது. நாம் தொழில்நுட்பங்கள் தரும் கவர்ச்சியைப் பார்க்கிறோம். ஆனால் அந்தக் கவர்ச்சி நமக்கு கொஞ்சம் கூட உதவியில்லாத பல தொழில்நுட்பங்களை நம் தலையில் கட்டுகிறது. யோசித்துப் பாருங்கள்.
– காசு, பணம், துட்டு, மணி… மணி…