Monday, December 23, 2024
Home > கேள்விபதில் > அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்த தாங்க… – #கேள்விபதில் – 19

அடுத்த மாப்பிள்ளை நாங்க… பொண்ணு இருந்த தாங்க… – #கேள்விபதில் – 19

நண்பர்களுடன் (ஆண் நண்பர்கள் மட்டும்) பாண்டிச்சேரிக்கு பயணம் மேற்கொண்டிருந்தேன். அங்கே என் நண்பர்கள் குழுவினருடன்  பேசிக் கொண்டிருந்த பொழுது நான் அனைவரிடமும் ஒரு கேள்வியை முன் வைத்தேன். அந்தக் கேள்விக்கு அவர்கள் சொன்ன பதிலே இப்பதிவை எழுதத் தூண்டியது. பெயர்களும், நிகழ்வுகளும், ஊர்களும் நாகரிகம் கருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களைப் புண் படுத்த எழுதப்பட்ட பதிவல்ல, மாறாக இத்தளத்தை வாசிக்கும் வாசகிகளுக்காக எழுதப்பட்டது.

நான் கேட்ட கேள்வி இதோ…

கேள்வி: எந்த மாதிரியான வாழ்க்கைத் துணை உனக்கு வேண்டும்?

பதில்:

நாங்கள் நான்கு பேர் சென்றிருந்தோம். தேவேந்திரன் (தேவ்) , திருமுருகன் (திரு), தமிழரசன் (தமிழ்) மற்றும் நான். கல்லூரி காலங்களில் நானும் தேவ்வும் ஒரு அறை, தமிழும் திருவும் எங்களுக்கு பக்கத்து அறை. என்னைத் தவிர மற்றவர்கள் மூவருக்கும் இன்னும் திருமண நடந்திருக்கவில்லை. அவர்கள் மூவரும் பெங்களூரூவில் இருக்கும் ஐடி நிறுவனங்களில் வேலைப் பார்ப்பவர்கள். என் திருமணத்தில் தான் கடைசியாக சந்தித்துக் கொண்டோம். காதலர் தினத்தன்று மனைவியுடன் எங்காவது செல்வது தான் திட்டம். அதற்கு இடம் பார்க்க வேண்டியே இந்தப் பாண்டிச்சேரி பயணம் ஏற்பாடானது. சனி(28/01/2017), ஞாயிறு(29/01/2017) தான் எங்களது பயண நாட்கள்.

அவர்கள் மூவருக்கும் இன்னும் திருமணமாகாத காரணத்தால் வீட்டில் சச்சரவின்றி அனுமதி வாங்க முடிந்தது. நானோ திருமணமானவன். எப்படியே டிராமா போட்டு அம்மணியிடம் அனுமதி வாங்கிவிட்டேன். உண்மையில் அவர்கள் மூவரையும் துன்புறுத்தி இந்த பயணத்திற்கு அழைத்துவந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். “கல்யாணமான நானே வரேன், உங்களுக்கு என்னடா வர்றதுகு… மரியாதயா வந்து சேரு…” என்று நண்பர்களிடமும், “கல்யாணமான உடனே எங்கள மறந்துட்ட, ரொம்ப மோசம்  நீ” என்று நண்பர்கள் சொல்கிறார்கள், அதனால், “இந்த ஒருமுறை மட்டும் போய்விட்டு வருகிறேன்” என்று அம்மணியிடமும் இந்தப் பயணத்திற்கு ஒப்புதலைப் பெற்றேன். (பிளீஸ்… அம்மணிகிட்ட மாட்டி வீட்டுடாதீங்க…)

சரி நாம், கேள்விக்கு வருவோம். அங்கே பாண்டிச்சேரி பீச்சில் பாறைகள் மீது உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம், கையில் ஆளுக்கு ஒரு பாட்டிலுடன் ( அட. அது கின்லே(kinley) தண்ணி பாட்டில். நம்புங்க. )

தேவ் என்னிடம், “தமிழுக்கு பொண்ணு பாக்குறாங்க” என்றான்.

“வாடா… வாடா… வந்து, ஜோதியில ஐக்கியமாகு… வாழ்த்துக்கள்” என்றேன்.

அதற்கு திரு, “வயசு 26 ஆகுதுல… அதான் அவன் வீட்டுல பொண்ணு பாக்குறாங்க… அவனுக்கு தம்பி வேற இருக்கான்” என்றான், தமிழும் ஆமோதிப்பதைப் போல தலையாட்டினான்.

பிறகு உலக அரசியல் முதல் அதிமுக பஞ்சாயத்துக்கள் வரை பேசி முடித்திருந்தோம். சூரியன் மறைந்து, இருள் பரவ ஆரம்பித்திருந்தது. கடல் காற்றும், அலையும் வேகமேடுக்கத் துவங்கின. அந்த இடமே ரம்மியமாக மாறிக்கொண்டு வந்தது. நிலவின் ஒளி, கடலில் பிரதிபளிப்பதைப் பார்த்த உடனே அம்மணியுடன் இங்கே வரலாம் என முடிவு செய்துவிட்டேன்.

“உங்களுக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்” என்று அவர்கள் மூவரையும் பார்த்துக் கேட்டேன்.

முதலில் திரு, “எனக்கு…” என்று பேச ஆரம்பித்தான். அவனின் எதிர்பார்ப்புகள் சுருக்கமாக இதோ…

“டிகிரி படித்திருக்க வேண்டும்,

1 வருடம் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்,

திருமணத்திற்குப் பின் என்னைப் பார்த்துக் கொண்டால் போதும்,

மார்டன் டிரஸ் கூடாது,

வாட்ஸ் ஆப், முகநூலில் அவ்வளவாக ஈடுபாடு இருக்கக் கூடாது,

முக்கியமாக காதல் அனுபவங்கள் இருக்கவே கூடாது,

5அடி உயரம், மாநிறம், பார்க்க லட்சனமாக இருக்க வேண்டும்,

சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்,

ஊர்காரப் பெண்ணாக இருக்க வேண்டும்”

நவரசங்களுடன் அவன் பேசி முடித்திருந்தான். அவன் பேசியதிலிருந்து சில எதிர்பார்ப்புகளை என் மனதிற்குள் உள் வாங்கிக் கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது. இந்த பட்டியலும் தமிழுக்கு அப்படியே பொருந்துவதாக சொன்னான். ஆனாலும், “கர்ப்பம் ஆகுற வர, அவ வேலைக்குப் போகட்டும், அப்புறம் புள்ளக் குட்டிகளைப் பார்த்துக்கிட்டு வீட்டிலே இருக்கட்டும்” என சொன்னான். தேவ், “எனக்கு பெருசா எந்த எதிர்பார்ப்புமில்லை” என்பதுடன் முடித்துக் கொண்டான்.

தமிழரசனின் தங்கையும் ஐடி நிறுவனத்தில் தான் வேலை செய்கிறாள். ஒரு வருடம் முன்பு தான் அவளுக்குத் திருமணம் நடந்தது. மூன்று வருடத்திற்கு முன் தமிழின் அப்பா தன் பெண்ணை வேலைக்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்ன பொழுது கூட, தமிழ் தான், வீட்டில் பேசி சமாதானம் செய்தான். புகுந்த வீட்டிற்குச் சென்ற பின்பும் தமிழின் தங்கை செல்வி இன்னும் அதே நிறுவனத்தில் தான் பணி புரிந்துக் கொண்டிருக்கிறாள். தன் தங்கைக்கு ஒரு நியாயம், தனக்கு மனைவியாக வரப் போகிறவளுக்கு ஒரு நியாயமா? சரி, வேலைக்குப் போது அவரவர் குடும்பத்தாரின் தனிப்பட்ட முடிவு என்பதால் அதனை விட்டுவிடுவோம்.

ஆடை அணிவதில் கட்டுப்பாடும், காதல் அனுபவம் இல்லாதிருக்க வேண்டுவதும் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் மிக மிக தவறானவை. என் நண்பர்கள் இருவருமே வார நாட்களில் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் பெண்களிடம் அடிக்காத கூத்துக்களா? இல்லை, வார இறுதியில் தன் தோழிகளுடன் இவர்கள் போடாத கும்மாளங்களா?

இவர்களின் வாட்ஸ்ஆப் கடலைகளையும், முகநூல் அலப்பறைகளையும் நான் கண்டிருக்கிறேன். அது ஒன்றையே இவர்கள் பொழுது போக்காக கொண்டிருப்பவர்கள். இவர்கள் ‘எல்லையே’ மீறலாம், ஆனால் இவர்களுக்கு மனைவியாக வருபவர்களுக்கு மட்டும், எதுவுமே தெரிந்திருக்க கூடாதாம். இவர்கள் மட்டும் நவீன உடைகள் அணிந்திருக்கும் பெண்களுடன் பழகலாம், நட்பு வைத்திருக்கலாம், ஊர் சுற்றலாம். ஆனால் இவர்களுக்கு வரும் மனைவிமார்கள் மட்டும் புடவையும், சுடிதார் மட்டுமே அணிந்தவர்களாக இருக்க வேண்டும். என்ன ஒரு அநியாயம்.

முதலில் உங்களுக்கு மனைவியாய் வரப்போகும் பெண்ணுக்கு விதிக்கும் விதிமுறைகளையும், குணங்களையும் நீங்கள் பெற்றிருங்கள், பிறகு உங்களுக்கு வரப்போகும் மனைவிமார்களின் குணங்களைப் பற்றி பேசுங்கள். அதுவரை இவைகளைப் பற்றி பேசக்கூட உங்களுக்கு அனுமதியில்லை. அனுமதியில்லை என்பதனை விட தகுதியில்லை என்றே சொல்லலாம். உங்களுக்கு வரப்போகிறவள் பெண் என்பதனால் மட்டும் தானே இவ்வளவு எதிர்பார்புகள். திருமணத்திற்கு பின் கிடைக்க வேண்டிய சுகங்களை திருமணத்திற்கு முன்னே அனுபவிக்கும் சமுதாயமாக மாறிவருகிறோம் என்பதனையும் நினைவில் கொள்க நண்பர்களே.

இன்றைய பெரும்பாலான ‘மாப்பிள்ளைகளுக்கு’ அம்மாவைப் போல கேள்வி கேட்காமல் அன்பு செலுத்த ஒரு பெண் தேவை, அவர்களின் காம இச்சைகளின் பசி தீர்க்க ஒரு பெண் தேவை, எடுபிடி வேலைகளைச் செய்ய ஒரு வேலைக்காரி தேவை, குழந்தைப் பெற்றேடுக்க ஒரு மனித இயந்திரம் தேவை. இவை அனைத்தும் ஒரு சேர இருக்குமாறு ஒரே பெண்ணாக சதைப்பிண்டமாக மட்டுமே இருக்க வேண்டுகிறார்கள். அவர்களுக்கு பெண்களின் ஆசைகள், இச்சைகள், குழப்பங்கள் பற்றிய அக்கறையில்லை. இவ்வாறான மாப்பிள்ளைகள் உருவாக தெரிந்தோ தெரியாமலோ அந்த மாப்பிள்ளைகளின் அம்மாக்களே பிரதானக் காரணமாக இருக்கிறார்கள். (அதாவது reference ஆக இருக்கிறார்கள்) அதனால் தான் என்னவோ இக்கால பெண்களுக்கும் அவர்களது மாமியார்களுக்கும் ஒத்தே போவதில்லை.

அடுத்த மாப்பிள்ளை நாங்க… என கிளம்பும் முன்னும், பொண்ணு இருந்த தாங்க… என கேட்கும் முன்னும்,  இன்னும் நிறைய மாற்றங்கள் நம் மனதிற்குத் தேவை என்பதனை நினைவில் கொள்க நண்பர்களே. நீங்கள் மாறினாலும், மாறவிட்டாலும் சமுதாயம் முன்னோறிக் கொண்டோயிருக்கும்.

– முகூர்த்தத்திற்கு நேரமாகிடுத்து மாப்பிள்ளை எங்க?

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Koodalingam
Koodalingam
7 years ago

Ultimate sattai…..
Yes…. each and everyone should follow what our expectations