என் தோழியின் திருமணத்திற்காக திருச்சிக்கு சென்றிருந்தேன். கல்லூரியில் அவள் என் வகுப்புத் தோழி. இரவு விருந்து முடிந்ததும், என் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தமையால், எங்களுக்கு பேசுவதற்கு நிறைய இருந்தது. வேலை, காதல், மோதல், கிசு கிசு, கல்யாணம் என பல தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தோழி, குமுதாவிற்கு, அவளின் வருங்கால கணவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. பிரகாசமாக, அவருடன் பேச போனவளின் முகம், பேசிவிட்டு திரும்பி வரும்பொழுது வாடி இருந்தது. நண்பர்கள் குழாமில் எல்லோரிடமும் ஒரு இறுக்கம் குடிகொண்டது. அவள் ஏன் சோகமாக இருக்கிறாள் என்று தெரிந்துக்கொள்ள எல்லோரும் விரும்பினர். ஆனால் யாரும் அதனைப் பற்றி பேச முன் வரவில்லை. அதற்கு மேல் அவள் விளையாடவில்லை. மணப்பெண்னை பார்க்க செல்வதாக சொல்லி அங்கிங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
மீண்டும் சீட்டு விளையாட மனமில்லாமல், நான் எனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேலையில், குமுதா பால்கனியில் நின்று பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவள் என்னைப் பார்த்தாள். அருகில் வரும் படி கையசைத்தாள்.
அவள் அருகில் சென்று “என்ன குமுதா?” என்று கேட்டேன்.
“கொஞ்சம் பேசனும்” என்றாள்.
“ஓ பேசலாமே” என்றேன்.
“எனக்கும் என் வருங்கால கணவருக்கும் எல்லாம் ஒத்துப்போனாலும், ஒரே ஒரு விசயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு இருக்கிறது” என்றாள்.
“அப்படி என்ன தான் கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்கும்?” என்றேன்.
“அவருக்கு இரண்டு அக்காக்கள், இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஆனாலும், குழந்தையில்லை. இருவரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். குழந்தை பாக்கியம் அவர்களுக்கு தள்ளி போவதாக சொன்னார். அதனால் அவரின் பெற்றோருக்கு வருத்தம்” என்றாள்.
மேலும், “அவரின் பெற்றோருக்கு சீக்கிரம் பேரன், பேத்தியை பார்க்க வேண்டுமாம். ஆதனால், திருமணமான உடனே நாம் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். எனக்கோ, ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை. அதனை அவரிடம் சென்னாலும் புரிந்துக் கொள்ள மறுக்கிறார். என்ன செய்வது?” என்று தனது மனக்குமுறலை என்னிடம் கொட்டினாள்.
“இது நீங்க ரெண்டு பேரு மட்டுமே பேச வேண்டியது. இதுல நான் கருத்து சொல்ல என்ன இருக்கு?” என்று குமுதாவிடம் இதனைப் பற்றி பேச தயங்கினேன்.
“இல்ல, இத பத்தி யார்கிட்ட பேசறதுனு தெரியல. அதனால தான் உன்கிட்ட கேட்கறேன், எனக்கு இந்த குழப்பத்தைப் போக்குவதற்கு ஏதாவது வழி இருக்கானு சொல்லு” என்று பேச தயங்கிய என்னை பேச வைக்க ஆசுவாச படுத்தினாள்.
தயங்கிய படியே பேச துவங்கினோன்.
“நீ எடுத்தவுடனே அவர்கிட்ட, என்னால் திருமணமான உடனே குழந்தைப் பெத்துக்க முடியாதுனு சொல்லிட்ட. அவருக்கு இருந்த கனவு களைந்து போயிடிச்சினு அவர் நினைக்கிறார். அதனால தான் அவர் உன் சம்மததுக்காக உன்கிட்ட அதை பேசுறாரு. அவரோட இடத்துல இருந்து பார்த்தால், அவரு ஆசை படறது தப்பில்லை” என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள்.
“நீயும், அவருக்கு ஆதரவாக தான் பேசுற…” என்று முறைத்தாள்.
“நான் சொல்றத முழுசா கேளு குமுதா” என்று அவளை அமைதிப்படுத்தினேன்.
“அவரு ஆச படறதுல தப்பில்ல. ஆனா இதுல உன் சம்மதம் தான் முக்கியம்” என்றேன்.
“நான் தான், இப்ப வேணாம் ஒரு வருடம் ஆகட்டும்னு சொல்றனே” என்றாள்.
“சரி. நீ அவர்கிட்ட அடுத்த முறை வேற மாறி பேசு. அவரு கொஞ்சம் யோசிப்பாரு.” என்று பின் வருமாறு விளக்கினேன்.
“இங்க பாருங்க. அந்த காலத்துல பெண்ணுங்க யாரும் பெரிசா படிக்கல, அதனால எல்லா வீட்டு வேலையும் வீட்டுல இருந்தே கத்துகிட்டாங்க. ஆனா இப்ப நாங்க எல்லாம், ஸ்கூல், காலேஜ் அப்படினு சுத்திகிட்டு ஒன்னுமே கத்துகல. நான் உங்களுக்கு எப்படி சாப்பாடு செஞ்சு போட்டாலும், நீங்க ஏத்துகுவிங்க. ஆனா நம்ம குழந்தை வரும் போது, அத சரியா பாத்துகனும். அதுக்கு நாம கொஞ்சமாவது கத்துக்கனும். அப்ப தான் நம்ம குழந்தைய நாம நல்லா பாத்துக்க முடியும். இல்லை, நான் சொல்லறதுல கொஞ்சம் கூட நியாயமில்லைனு உங்களுக்கு பட்டுச்சினா, நீங்க என்ன சொன்னாலும் சரிங்க” என்று பேசுமாறு அவளிடம் விளக்கினேன்.
“சரி. பேசி பார்கிறேன்” என்று அவள் சொல்லவும், அவளின் வருங்கால கணவர் அலைப்பேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது. காலையில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, அவருடன் பேசிக் கொண்டே அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் பால்கனியிலே நின்றிருந்தேன். சாலையில் மக்கள் நடமாட துவங்கியிருந்தார்கள். நேராக என் அறைக்குச் சென்று, குளித்துவிட்டு, திருச்சி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க துவங்கினேன். கிளம்ப தயாராக இருந்த பெங்களூரூ பேருந்தில் ஏறி அமர்ந்து, கண்ணயர்ந்தோன். அலைபேசியில் ஏதோ சத்தம் கேட்டதால் எடுத்துப் பார்த்தேன்.
“உன் யோசனை பலித்தது !! அவர் யோசிப்பதாக சொல்லியிருக்கிறார் !!! ஆமாம், மண்டபம் முழுவதும் தேடிவிட்டேன், நீ எங்கே இருக்கிறாய்?” என்று குமுதா குறுச்செய்தி அனுப்பியிருந்தாள்.
அவளுக்கு கீழ்வரும் பதிலை அனுப்பிவிட்டு, நான் முசிறி அருகே, காவேரியின் அழகையும், இளஞ்சிவப்பு சூரியனையும் ரசிக்க துவங்கினேன்.
குமுதாவிற்கு அனுப்பிய பதில் இதோ, “என் முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வந்த என்னால், அவள் கழுத்தில் இன்னொருவன் தாலி கட்டுவதைப் பார்க்கும் தைரியமில்லை. தோற்றது காதல் தான், அவள் நினைவுகள் அல்ல…”
– பெண்ணே உன் நினைவுகளுக்கு நன்றி…
அருமையான climax..!!!