Monday, December 23, 2024
Home > அரசியல் > அரசியலில் ரஜினி… முத்தலாக் விவகாரம்…

அரசியலில் ரஜினி… முத்தலாக் விவகாரம்…

முத்தலாக் விவகாரம்…

தலாக்… தலாக்… தலாக்… நமது இஸ்லாமிய சகோதரிகளை அச்சம் கொள்ள வைக்கும் வார்த்தைகள். இஸ்லாம் சமூகத்தில் ஒரு கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய இந்த வார்த்தைகளை சொன்னால் போதுமானது. எழுத்து மூலமாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ, மின்னஞ்சல், குறுச்செய்தி என எவ்வகையில் சொன்னாலும் அது விவாகரத்தில் முடியும் என்ற சூழல் இங்கே உள்ளது. மற்ற சமூகத்தினர் போல, நீதிமன்றங்களை நாடி, வாய்தா மேல் வாய்தா வாங்கி அலைய வேண்டியதில்லை. எளிதான நடைமுறை தான், ஆனால் ஆண்களுக்கு சாதகமான முத்தலாக் நடைமுறையால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. இதற்கு முக்கிய காரணம், முத்தலாக் நடைமுறை  இந்திய சட்டத்திற்கும் உட்பட்டதல்ல, இது இஸ்லாம் மார்கத்தின் பாரம்பரிய நடைமுறை என்பதே. பாதிக்கப்பட்டவர்களுக்கு எதவிதமான நிவாரணமும் சட்ட ரீதியாக கிடைக்காததால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி, இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றமும் ஐந்து மதங்களை பின்பற்றுபவர்களைக் கொண்ட நீதுபதிகள் அமர்வை அமைத்தது இந்த வழக்கின் வாதங்களை  சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்து ஒரு தீர்ப்பை சொன்னது. அதன்படி, முத்தலாக் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. அரசை உடனே ஒரு சட்டம் கொண்டுவந்து அதனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது. இங்கே தான், பாஜகவின் சித்து விளையாட்டு துவங்கியது.

முத்தலாக் என்ற வார்த்தையை வைத்து சில மாதங்களாக மத்தியில் ஆளும் பாஜக அரசு அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசாங்க கொள்கைத் திணிப்பு நிறுவனங்களாக செயல்படும் வட நாட்டு காட்சி ஊடகங்கள், இஸ்லாமிய பெண்கள் முத்தாலக் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பது போலவும், இஸ்லாமிய ஆண்கள் எதிராக இருப்பது போலவும் ஒரு மாயயை கட்டமைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். இதன் மூலமாக, 2019ல் நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய சகேதரிகளின் வாக்குகளை பெற குறி வைத்து கடுமையாக வேலைப்பார்த்து வருகிறது பாஜக. ஆனால், உணமையில் இந்தச் சட்டம் நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில்லை. வரப் போகும் முத்தலாக் தடை சட்டத்தின் முக்கிய சாரம் என்ன தெரியுமா? உடனடி முத்தலாக் விவாகரத்து முறை தடை செய்யப்படுகிறது, மீறுபவர்கள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்படும், நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்படும். நடைமுறை சிக்கலும், குழப்பங்களும் நிறைந்த சட்ட முன்வரைவாக இருக்கிறது.

இங்கே தேவை சமத்துவமான விவாகரத்து நடைமுறை, இதுவரை இருக்கும் முத்தலாக் நடைமுறையில் ஒரு கணவனால் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும், மனைவியில் கருத்துக்களுக்கு சபையில் இடமில்லை. அதனை நிவர்த்தி செய்யவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, கூடவே, உடனடி முத்தலாக் முறையை ரத்து செய்ய உத்தரவிட்டது. இப்போதுள்ள சட்ட முன்வரைவு படி, சட்டம் நடைமுறைக்கு வந்தால், மனைவியின் புகாரின் அடிப்படையில் கணவனை கைது செய்ய முடியும், ஆனால், அந்த இடத்திலேயே, அந்த தம்பதியினர் சமாதனமாக போகும் வாய்ப்பு அடியோடு பட்டுப்போகிறது. எல்லா குடும்ப நீதிமன்றங்களிலும் எந்த ஒரு திருமணத்தையும் உடனே ரத்து செய்ய உத்தரவிட மாட்டார்கள். கணவனும், மனைவியும் ஒன்று சேர போதிய அவகாசம் வழங்கப்படும். இருக்கும் எல்லா வழிகளையும், வாய்ப்புகளையும், நீதிமன்றம், விவாகரத்து கோரும், தம்பதியருக்கு வழங்கும், கடைசி வரை, உறுதியாக விவாகரத்து கோரும் தம்பதிகளுக்கே விவாகரத்து வழங்கப்படும். அப்படியான ஒரு நிலையை இந்த முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். அதுவே நிரந்தர தீர்வை தரும்.

சரி நாம், இங்கே இருக்கும் ஏழரைக்கு வருவோம்.

உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டதால், முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டுவர கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் பாஜக அரசே, இதே உச்ச நீதிமன்றம் காவேரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப்போகிறதே, அதனை இன்னும் நடைமுறை படுத்தவில்லையே? ஏன் 2018ல் வரும் கர்நாடக மாநில தேர்தல் காரணமா? போகட்டும், எம் மக்களின் தலையெழுத்து என்று இதனை விட்டுவிடுவோம். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம்(!) என சூழுரைத்து ஆட்சியை பிடித்தீர்களே, லோக்பால் சட்ட வேண்டும் என்று வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் ரகளை செய்தீர்களே, இப்போது, பலமுறை உச்ச நீதிமன்றம் தண்டித்தும், கண்டித்தும், இன்னும் லோக்பால் சீர்திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவேயில்லையே ஏன்? நீங்கள் செய்யும் ஊழலுக்கும், கொள்ளையடிக்கும் அடிக்கும் பணத்திற்கும் ஆபத்து வந்துவிடும் என்பதனாலா?

மத்தியில் ஆளும் பாஜக அரசே, அது எப்படி, உங்களுக்கு வசதியாக இருக்கும் கருத்துக்களை மட்டும் ஏற்று அதனை நிறைவேற்ற முயல்கிறீர். நடுநிலையேடு இருப்போம் என்று இறைவன் மீது ஆனையிட்டு தானே பதவி ஏற்றுக் கொண்டீர்கள்? இதே நிலை தொடர்ந்தால் 2019ல் மோடி வெற்றி பெறுவது கடினம் என்றே தோன்றுகிறது.

அரசியலில் ரஜினி…

இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று 1996ஆம் ஆண்டு முதல் சொல்லிவிட்டு 2018ல் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருக்கிறார் ரஜினி. கமலும் ஏற்கனவே அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டதால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. இப்போது தமிழகத்தை ஆளும் அதிமுகாவை சார்ந்த, எட்டப்பாடி அரசு, மன்னிக்கவும், எடப்பாடி அரசிற்கு வெல்ல ஒன்றுமேயில்லை, இனி எல்லாமே இழக்க தான் நேரிடும், எதிர்கட்சியாக இருக்கும் திமுகவும், இருப்பதை தக்க வைத்தால் வெல்லலாம் என்று கணக்கு போடுகிறது. ரஜினியின் மூலம் தமிழகத்தை வென்றுவிடலாம் என்பது பாஜகவின் கணக்கு. இனி என் கணிப்பிற்கு வருகிறேன்.

ரஜினியின் அரசியலால், பாதிக்கப்படப்போகும் கட்சிகள்.

  1. நிச்சயமாக அதிமுக: ரஜினியின் இலக்கே அதிமுக வாக்கு வங்கிதான்.
  2. பாஜக: தமிழகத்தில் பாஜகவிற்கு இப்போதுள்ள ஆதரவு இனி ரஜினிக்கு தான். பாஜகவிற்கு உள்ளதும் போச்ச என்பது தான் கள நிலவரம்.
  3. பாமக: கடுமையான பாதிப்பிருக்கும்.
  4. மதிமுக: தலைவர்கள் மட்டுமே மீதம் இருப்பர்.
  5. விடுதலை சிறுத்தைகள்: சில காலங்களுக்கு கடுமையான பாதிப்பிருக்கும்.
  6. தேமுதிக: மீதம் இருந்தால் பார்க்கலாம்.
  7. காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ்: இனி தலைவர்களுக்கும் பஞ்சம் வரலாம்.
  8. மற்ற கட்சிகளுக்கும், இதர லெட்டர் பேட் கட்சிகள் அனைத்துக்கும் ஆபத்து தான்.
  9. கடைசியாக ரஜினியின் கட்சி. ஆம். நிச்சயமாக ரஜினி கட்சி ஆரம்பிப்பது, அவரது கட்சிக்கே பின்னடைவாக அமையப்போகிறது. இப்போது ஏன் என்பதனை உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் உள் மனது செல்வது இதைத்தான்.

ரஜினியின் அரசியலால், ஆதாயம் பெறப் போகும் கட்சிகள்.

  1. திமுக: எந்த ஒரு நாயகனுக்குமே வில்லன் வேண்டும், அப்போது தான் வில்லனை அழித்து நாயகன் வெற்றிவாகை சூட முடியும். அந்த இலக்கணப்படி பார்த்தால், ரஜினிக்கு தமிழக அரசியலில் இருக்குப் ஒரே போட்டி திமுகவாகத்தான் இருக்க முடியும். இங்கே பிரச்சனை என்னவென்றால், திமுக தலைகனத்தில் இருக்கிறது. அதிமுகவை விட்டால் நாம் தான் என்ற தலைக்கனம். அதனால் தான் ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் டிபாசிட் பறி போனது. மேலும், புதிய முகங்களும், இளைஞர்களும் திமுகவில் முன்னிலைப்படுத்தப் பட வேண்டும். இல்லையே, சினிமா நாயகன் ரஜினி உண்மையாக நாயகனாக மாறலாம். எப்படி பார்த்தாலும் திமுகவை சுற்றி அரசியல் நடக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
  2. கமல்: வில்லனைவிட முக்கியம். துணைவில்லன்கள். அரசியலில் நிச்சயம் அந்த இடம் கமலுக்குத்தான். யாருக்குத் தெரியும் ரஜினியின் உண்மையான போட்டியாளராக திமுகவை முந்தி கமல் கூட வரலாம். காலம் தான் எல்லாவற்றிக்கும் பதில் சொல்லும்.

இங்கே நாம் கூட்டப்போகும் ஏழரை என்னவென்றால்,

ரஜினி அரசியலில், விஜயகாந்த் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகளை வெல்ல முடியுமே தவிர ஆட்சியை பிடிக்க முடியாது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது போல், ஆன்மீக அரசியல், பாஜக சார்பு, முக்கியமாக பாஜக தலைவர்களின் ரஜினி சார்பு என எல்லாமே ரஜினிக்கு எதிராக உள்ளது. கவனம் ரஜினி அவர்களே, இல்லாவிட்டால், ஆந்திரத்தில், காங்கிரஸிற்கு எப்படி சிரஞ்சிவியோ, அப்படி தமிழகத்தில் பாஜகவிற்கு நீங்களாகிவிடுவீர்கள்.

பின்குறிப்பு: காலமும், நேரமும், சரியான சிந்தனையும் கூடி வந்தால், ரஜினி பாஜகவை எதிர்த்து நின்றால், 2019ல் மோடிக்கு போட்டியாகவும் வர சிறுதுளி வாய்ப்பு இருக்கிறது. யோசியுங்கள் ரஜினி அவர்களே.