Monday, December 23, 2024
Home > சினிமா பாதிப்பு > ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்… மாற்று மாப்பிள்ளை…

குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும் என்று தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டனர். பாகனிடம் அனுமதி பெற்று, குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்தனர். ஒருவன் யானையின் துதிக்கையைத் தொட்டுப் பார்த்தான், இன்னொருவன் வால், மற்றவன் கால் மற்றும் வயறு என ஆளுக்கு ஒரு பகுதியாக தொட்டுப்பார்த்தனர். குருடர்கள் எந்த உறுப்பைத் தொட்டுப்பார்த்தார்களோ, அதுவே யானையின் முழு உருவமாக இருக்கும் என்று முடிவிற்கு வருவதாக கதை முடியும். காதலும் அது போன்றது தான்.  உணர்ந்தவனுக்கு காதல் ருசிக்கும், இழந்தவனுக்கு காதல் கசக்கும், வீழ்தவனுக்கு காதல் வலிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்ச்சி. எல்லையற்ற உணர்வே காதல்.

இப்பதிவு காதலைப் பற்றியது என்பது உங்களின் ஊகமாக இருந்தால், உங்களது கணிப்பு சரியானதே. அதற்காக தங்களுக்கு எனது முழு மனதார பாராட்டுக்கள். எழுத்துலகில் காதல் கடல் போன்றது. அதனை யாரும் இன்னும் முழுமையாக எழுதவும் இல்லை, எந்த வாசகரும் முழுமையாக படித்து திளைக்கவும் இல்லை. எழுதப்படாத, இன்னும் வாசிக்கப்படாத காதல் காவியங்கள் பல்லாயிரம் இருக்கின்றன. திகட்ட திகட்ட, சலிக்க சலிக்க காதல் கதைகளை படித்துக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

ரோமியோ-ஜுலியட், அம்பிகாபதி-அமராவதி, மார்க் ஆண்டனி-கிளியோபட்ரா, சலிம்-அனார்கலி என்று உலகம் முழுவதும் பிரபலமான காதல் கதைகள் ஏராளம். இங்கே காதலிக்காத, காதலில் விழாத மனிதர்களை காண்பது அரிது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதல் உணர்ச்சிகள் பெருக்கெடுப்பது இயல்பு. அது தான் இயற்கை. அதேபோல எல்லா காதல்களும் வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது. சில காதல்கள் வெல்லும், சில காதல்கள் தோற்கும்.

நாம் இப்பதிவின் நோக்கத்திற்கு வருவோம். ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி என்னை வெகுவாக பாதித்தது. காதல் பற்றியும், காதல் தோல்வி பற்றியும் என் நண்பனிடம் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது அந்த காட்சி என் நினைவிற்கு வந்து சென்றது. ஒரு நாள் கூத்து, நிவேதா பெத்துராஜும்-தினேஷும் கதை சொல்லிகளாக நடிந்திருந்த படம்.

க்ளைமாக்ஸ் என்னும் உச்சகட்ட நிகழ்வில், நிவேதா பெத்துராஜிற்கும் அவரது தந்தைக்கும் நடக்கும் உரையாடல் தான் இத்திரைப்படத்தில் என்னை மிகவும் பாதித்த காட்சி. காதலில் தோற்றவர்களின் மனநிலையை அந்தக் காட்சி எனக்கு உணர்ந்தியது. திரைப்படத்தில் நிவேதாவின் தந்தை நிவேதாவின் காதலை ஏற்றுக்கொள்ளாமல் தனது நண்பரின் மகனுக்கு நிவேதாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வார். இதனால் பதட்டமடையும் நிவேதா தினேஷிடம் தனக்கு திருமண ஏற்பாடு நடப்பது பற்றியும், ஏதாவது செய்து அதனை தடுத்து நிறுத்தும் படியும், தனது தந்தையின் சம்மதம் வாங்க ஏதாவது செய்யுமாறு சொல்வார். குடும்பமா? காதலா? வேலையா? என கடைசிவரை ஒரு முடிவிற்கும் வர முடியாமல், அவர்களது காதல் தோல்வியைத் தழுவும். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிவேதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும். திருமணத்திற்கு தினேஷின் நண்பர்கள் சிலர் முதலிலேயே சென்று விடுவர். தினேஷும் பாலசரவணனும் கடைசியில் கிளம்பிவருவர்.

அப்போது, எதிர்பாராத விதமாக, மாப்பிள்ளையின் தந்தை வாகன விபத்தில் பலியாக, திருமணம் நின்றுவிடும். அப்போது பெரியவர்கள் கலந்துப்பேசி திருமணத்தை வேறு மாப்பிள்ளையை வைத்து நடத்த முடிவு செய்வர். அப்போது நிவேதாவிற்கும் அவரது தந்தைக்கும் பின் வரும் உரையாடல் நடைபெறும்.

“பொண்ணோட ராசி சரியில்லைனு இந்தக் கல்யாணம் நிற்கக் கூடாது. எனக்கும், மற்ற எல்லாத்துக்கும் இது தான் சரின்னு தோனுது. நம்ம சாதி ஆளுங்களுக்குள்ள ஒருத்தர சம்மதிக்க வேச்சிருக்கோம். நல்ல பையன். இல்ல. தினேஷ் தான் வேணுநாலும் அவன எங்கிருந்தாலும் கொண்டு வந்து இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்” என்று நிவேதாவிடம் அவரது தந்தை சொல்வார்.

அதற்கு நிவேதா,” தினேஷ் வேணாம் அப்பா!” என்பார்.

அதற்கு அவரது தந்தை ஏன் என்று கேட்பார்.

அப்போது நிவேதா,” என் கல்யாணம் நின்னுடிச்சி, மாப்பிள்ளை என்னைய வேணானு போயிட்டான், அதனால, தினேஷு கல்யாணம் செஞ்சிகிறதுக்கு, தினேஷ் ஒன்னும் பேக்கப் ஓப்ஷன் இல்ல (மாற்று மாப்பிள்ளையில்லை), தினேஷ் தான் வேணும்னு நினைச்சிருந்தா, உங்க சம்மதமில்லாம கூட எப்படியாவது நான் தினேஷ் கூட சேர்ந்திருப்பேன். அவனை உங்க முன்னாடி உட்கார வேச்சேன், நீங்க அவனை அவமானபடுத்தி அனுப்பிட்டிங்க. அவன வேணாம்னு நினைச்சிங்கல்ல அப்போ வேணாம். விடுங்க. நான் யாருக்கு கழுத்த நீட்டனும்னு சொல்லுங்க” என்று சொல்வது போல காட்சி முடியும்.

அடுத்த காட்சியில், நிவேதா கழுத்தில் தாலி ஏறும், அதனை தினேஷும், நிவேதாவும் சோகம் தழுவ ஏற்றுக்கொள்வார்கள். தியேட்டரில் காட்சியை பார்த்துவிட்டு வந்து பல நாட்களாகியும் அக்காட்சியின் தாக்கம் அப்படியே என்னுள்ளே இருக்கிறது.

காதலில் தோற்ற பல நண்பர்களை சந்தித்திருகிறேன். எல்லோரும் தங்கள் இழந்த காதலைப் பற்றி நிறைய நிறைய வருத்தங்களுடன் என்னிடம் உரையாடினார்கள். எல்லோர் மனதிலும், அவர்களது, முன்னாள் காதலைப் பற்றி பேசும் பொழுது ஒரு வித ஆனந்தமும், வருத்தமும், கலந்த கலவையை காண முடிகிறது. வரலாற்றை புரட்டிப் பார்த்தால், வென்ற காதலைவிட தோற்ற காதல் கதைகள் தான் பிரதானமாக இருக்கின்றன. தோற்ற காதலின் வலி வார்த்தைகளால் வடிக்க முடியாதது. அதன் வலியின் துயரம் என்ன ஆறுதல் சொன்னாலும் நீங்காது. காதலில் தோற்று, இப்போது மணமாகியிருந்த என் நண்பர்களிடம் நான் கவனித்த சிலவைற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

  • ஒரு பிரிவினர். தங்களின் காதல் தோற்றுப் போனாலும், தன் முன்னாள் காதலன்/காதலியுடன் நட்பு பாராட்டி, அவர்களது நலனில் பெரும் அக்கறை கொண்டிருக்கின்றனர். இங்கே காதல் வேறு வடிவமேடுக்கிறது.
  • இன்னொரு பிரிவினர். காதலி எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லிவிட்டு, அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுகின்றனர். இங்கே மனதில், காதல் மட்டும் அப்படியே இருக்கிறது.
  • மற்றொரு பிரிவினர். முன்னாள் காதலன்/காதலியிடம் தொடர்பு இல்லை என்றாலும், அவரது நண்பர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமும், எந்நேரமும் அவர்களது எல்லா விவரங்களையும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். இங்கே முறைமுகமாக ஒருதலையாய் காதல் தொடர்கிறது.

இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்ததில், எந்த மனிதனும் தன் முன்னாள் காதலை மறக்க தயாராக இல்லை. ஆனால் அதேசமயம் பெரும்பாலானவர்கள் தங்களது முன்னாள் காதலை வாழ்க்கைத்துணையிடம் மறைத்தே வைத்திருக்கின்றனர். அவர்களை ஏமாற்றுவதற்காக அல்ல, அந்த வலியை அவர்கள் விரும்புவதனாலே அதனை மறைத்து வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையாக நாகரீகம் தான்.

காதல் என்பது இரு மனதிற்குள் பூக்கும் ஒரு உணர்வு, அது சம்மந்தப்பட்ட இருவருக்குள் இருக்கும் வரை மட்டுமே அது காதல். மூன்றாவது நபருக்கு அந்த உணர்வை விளக்க முடியாது. அப்படி விளக்க முயன்றால், அது காதலாக இல்லாமல், கிசுகிசுவாக போய்விடும். காதல் என்றாலே ஸ்பெஷல் தானே, இருந்தாலும், தோற்ற காதல் என்றைக்குமே ஸ்பேஷல் காதல்.

– ஸ்பெஷல் காதல்… யாருக்கும் காட்ட முடியாத வலியின் அடையாளம்…