Monday, December 23, 2024
Home > அழகிய நினைவுகள் > வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…

வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…

வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…

2013ஆம் ஆண்டு வெளியான ராஜாராணி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. படம் தாறுமாறு வெற்றி. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்து அட்லி இயக்கிய திரைப்படம். ஷங்கரின் உதவியாளர் அட்லி என்ற அடையாளத்தை முதல் படத்திலேயே அட்லி உடைத்தெறிந்து, அவருக்கு என்று அடையாளத்தை கொடுத்த படம் ராஜாராணி.  தமிழக மக்களின் மனதில் நீங்க இடம் பெற்ற மௌனராகம் திரைப்படத்தின் நகல் போல ராஜாராணி இருந்தது என்று பலர் விமர்சித்தாலும், இரண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. படத்தின் கரு மட்டுமே சிறிது ஒத்துப்போவதாக இருந்தது.

ராஜாராணி திரைப்படத்தில் காதலின் மறுபக்கத்தை காட்டியிருப்பார் அட்லி. காதல் தோல்விக்குப் பின்னான வாழ்க்கைப் பற்றி இருவேறு கோணங்களில் காட்சிகள் அமைந்திருக்கும். உணர்ச்சிமிக்க காட்சிகள் நிறைய இருக்கும். அதிலும், உச்சபட்ச காட்சியில், ஜெய் இன்னும் உயிருடன் இருப்பதைக் கண்ட நயன்தாரா, ஆர்யாவிற்கு தகவல் தருவார். அதன் பிறகு, ஆர்யா-ஜெய் இடையே ஒரு உரையாடல் நடக்கும். பிறகு, நயன்தாராவும், ஆர்யாவும் ஒன்று சேர்வது போல திரைப்படம் முடிவுறும்.

ஆர்யா-ஜெய்யிடையே நிகழும் உரையாடலில், நயன்தாராவை இழந்தைப்பற்றி ஜெய், ஆர்யாவிடம் உணர்ச்சிவசப்படும் ஒரு வசனம் வரும். அந்த வசனத்தை ஒட்டியே இந்தப்பதிவு. அந்த வசனம் இதோ,

”எங்க அப்பா, என்னை அடிச்சி தான் ஊருக்கு அனுப்பிச்சாரு, பயந்துட்டே தான் போனேன். ஐயோ, லவ் போச்சே, லைப் போச்சேனு, எல்லா முடிச்சிடிச்சு நினைச்சேன். ஆனா, எல்லா லவ் ஃபையிலியருக்கும் பின்னாடி ஒரு நல்ல லைப் இருக்கு” என்று ஏமாற்றமே இல்லாததுப் போல ஜெய் பேசிக் கொண்டிருக்கும், நா தளுதளுக்க, உடைந்துப்போய் சொல்வார்.

“ஒத்துக்கிறேன், மிஸ்ஸிங் தான். வலிக்கிது தான். இப்ப என்ன பண்றது? அவளால என்னை மறக்க முடியாது. அதனால தான், நான் செத்ததா, என் ஃப்ரெண்ட வச்சி சொல்ல வச்சேன்.”

இந்த வசனம். என்னை மிகவும் பாதித்தது. என் நண்பர்கள் சிலருக்கு காதல் கைகூடவில்லை. அதனால், அவர்கள் பாதிக்கப்பட்டதை நான் கண்கூட கண்டிருக்கிறேன். அவர்களின் வலியை அவர்களின், வார்த்தைகள் மூலம் உணர்ந்திருக்கிறேன். மேலே ராஜாராணி திரைப்படத்தில் வரும் வசனம் என் நண்பர்களுக்கு அப்படியே பொருந்தியது. என் நண்பர்களின் காதல் கைகூடவில்லை என்றாலும், அவர்கள், காதலரை மறக்க தயாராக இல்லை. ஆண், பெண் இருவருமே ஒரே மாதிரி தான் நடந்துக் கொண்டார்கள். ( இங்கே காதலர் எனபது பாலற்ற சொல், காதலன்-காதலி என இருபாலருக்கும் பொருந்தும் )

காதலிக்க துவங்கியடனே, தங்களுடைய காதலர் தான் உலகம் என நினைக்க துவங்கிவிடுகின்றனர். அதன் படியே எல்லாவற்றிற்குமான முக்கியத்துவங்களில் மாற்றம் ஏற்பட்டுகிறது. காதல் ஒருவரை உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி என உணர வைக்கிறது. காதல் பாடல்கள் தனக்காகவும், தன் துணைக்காகவும் மட்டுமே எழுதியதைப் போன்றதொரு மாய உணர்வைத்தருகிறது. நேரங்காலம் தெரியாமல், போதையில் மிதப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. தன்னுடைய காதலரைத் தவிர எதற்கும் நேரம் போதுவதில்லை, அப்படியே நேரம் வாய்த்தாலும், ஒதுக்க மனம் இடம் விடாது.

எனது கல்லூரி நண்பன் ஒருவனின் காதல் வாழ்க்கை இங்கே பகிர விரும்புகிறேன். இவன் தான், தினமும் காலை அவளை எழுப்பிவிட வேண்டும். காலையில் அவள் எழுந்தவுடன் இவனின் குரல் தான் முதலில் கேட்க வேண்டும். இரவு உறங்கும் முன்னும் இவனின் குரல் தான் கடைசியாக கேட்க வேண்டும். இவன் எப்போது குளிக்க வேண்டும், அன்றைக்கு என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும், கல்லூரிக்கு என்ன உடை உடுத்த வேண்டும், அட, இவன் என்ன உள்ளாடை உடுத்த வேண்டும் என்பது உட்பட எல்லாம் அவளிடம் கலந்தாலோசித்து அவளின் விருப்பப்படியே செய்வான். அவனின் வாழ்க்கை, அவளைச் சுற்றியே இருந்தது. அவளின் வாழ்க்கை இவனைச் சுற்றியே இருந்தது. அவளைப் பற்றி இவன் பேசாத நாளில்லை. படுபயங்கரமாக சண்டைப் போட்டுக்கொள்வார்கள், ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஒன்றுமே நடக்காததைப் போல கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். இதனைக் கண்டு அந்த நாட்களில் எனக்கு கோவம் கோவமாக வரும்.

ஒழுங்கில்லாத, இலக்கில்லாத, அர்த்தமில்லாத என் நண்பனின் வாழ்க்கையில் காதல் செய்த மாயை என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர்கள் ஏன் காதலில் விழுந்தார்கள், இப்போது ஏன் பிரிந்தார்கள் என்பதெல்லாம் என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால், அவளை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும், அதற்கு நல்ல வேலைக்குப் போக வேண்டும், இரு குடும்பத்தாரின் சம்மதம் வாங்க வேண்டும், சமூகத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என காதல் அவனுக்கு உத்வேகம் தந்தது.

அவளும் இவனுக்கு சளைத்தவளில்லை. தன் குடும்பம், தனது காதலுக்கு அனுமதி மறுக்கும் நிலைவந்தால், குடும்பத்தை மீறி இவனை எப்படி அடைவது என திட்டத்தோடு தான் இருந்தாள். எப்படியும் வேலைக்குச் சென்று, சொந்தக்காலில் நின்றால், யார் தடுத்தாலும் இவனுடன் சேர்ந்துவிடலாம், என திடமான நம்பிக்கைக் கொண்டிருந்தாள். கல்லூரி காலம் முடிந்தும் அதே உணர்வோடு இருந்தார்கள். ஆனால், விதி விளையாடியது. அவர்களின் காதல் கைக்கூடவில்லை. இருவரும் பிரிந்துவிட்டனர், அதனால், நண்பர்கள் எல்லோருக்கும் வருத்தம். இருவர் மீதும் தவறு இருக்கலாம். இருவர் மீதும் தவறு இல்லாமல் இருக்கலாம். யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் விருப்பம் பிரிவாக இருக்கும் போது, யார் என்ன செய்ய முடியும். ஆனால், அதன் பின்னர் என் நண்பன் பட்ட கஷ்டங்களை எந்நாளும் என்னால் மறக்க முடியாது.

அவன் வாழ்க்கை திசை மாறத் தொடங்கியது. பொறுப்பாக இருந்தவன், பொறுப்பற்றவனாகிப் போனான். எல்லோரையும் ஒதுக்கினான். முக்கியமாக கல்லூரி நண்பர்களை எல்லோரையும் ஒதுக்கி வைத்தான். யாரையும் சந்திக்க விரும்பவில்லை. முகநூல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிரம் என எல்லா சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறினான். ஒரு கட்டத்தில், கைப்பேசியையும் தூக்கி எறிந்தான். நண்பர்கள் ஒருவராலும் அவனைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை.

பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டான். புதிதாக வேலைத் தேடுகிறேன் என்ற போர்வையில் ஊர் ஊராக சுற்றினான். மற்ற நேரங்களில், வீடே கதி எனக் கடந்தான். அவன் பெற்றோரும், அவன் நிலையைக் கண்டு, அவனிடம் எதுவும் சொல்ல முடியாமல் இருந்தனர்.  நினைத்த நேரங்களில் அழுதான். சில சமயங்களில், அவனது வீட்டை விட்டு வாரக்கணக்கில் வெளியே வரவில்லை. ஏதாவது புத்தகம் படிப்பான், சில நேரம் கணினியில் ஏதேனும் நோண்டிக்கொண்டிருப்பான். அவ்வப்போது திரைப்படம் பார்ப்பான். மற்றப்படி அவன் வீடு, முக்கியமாக அவனது அறை, இப்படியே நரகமாக, ஒன்பது மாதங்களை கழித்தான். பிரம்மைப் பிடித்தவன் போல இருந்தான். காதலிக்கும் போது எந்த அளவிற்கு இன்பத்தையும், சுகத்தையும் அனுபவித்தானே, அதனைவிட பல மடங்கு துன்பத்தை, காதல் தோல்வி அவனுக்கு பரிசாக தந்தது.

 

அப்போது ஒரு நாள், அவனது தந்தை என்னை சந்திக்க சென்னைக்கே நேரில் வந்தார். ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார். மேலே உள்ள எல்லாவற்றையும் அவர் சொன்னார், மகனை மீட்டுத் தரும்படி உதவி கேட்டார். அவன் இரண்டு முறை தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி செய்தான் என்று சொன்ன போது நான் உடைந்து, அழ துவங்கிவிட்டேன். தற்போது, மனநல மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், பெரியதாக எந்த முன்னேற்றமும் எற்பட்ட மாதிரி தெரியவில்லை என்றார்.

அடுத்த நாளே ஊருக்கு கிளம்பி என் நண்பனை என்னுடன் சென்னைக்கு அழைத்து வந்தேன். அவனிடம் மனம் விட்டு பேசி எண்ணினேன். அலுவலகத்தில் இரண்டு வாரங்களுக்கு விடுப்பு சொல்லிவிட்டு, அவனுடன் நேரம் செலவளிக்க முடிவு செய்தேன். அப்போது தான் எனக்கு ஒன்று புரியத் தொடங்கியது.

இவனுக்கு பித்துப் பிடிக்கவில்லை. இவன் காதலை எப்படி அணுஅணுவாக ரசித்தானே, அதே போன்று, காதல் தோல்வியையும் அணுஅணுவாக ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. பழையதை எதையும் நான் பேசவில்லை. அவ்வப்போது அவனே சொல்வான், அப்படி ஒரு நாள் சொன்னான்.

”நண்பர்கள் முன்னிலையில், அவள் தான் என் வாழ்நாள் காதலி என்றும், அவளை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என்றும் சொல்லிவிட்டேன். அதனை என்னால், நிறைவேற்ற முடியவில்லை. அவமானமாக இருக்கிறது. யாரை சந்தித்தாலும் காதலைப் பற்றியே கேட்கின்றனர், அல்லது ஆறுதல் சொல்ல துவங்கிவிடுகின்றனர். அதனாலேயே நான், வீட்டிலேயே முடங்கிவிட்டேன். இதிலிருந்து வெளியே வர முயற்சி செய்கிறேன், ஆனால், முடியலில்லை. அவளை மறக்க நினைத்தால், அவளது நினைவுகள் மட்டுமே என் மனதில் வட்டமடிக்கின்றன.”

”ஏன் பிரிந்தோம் என்பதே நினைவிற்கு வர மறுக்கிறது. என் நியாயங்களை தள்ளிவைத்துவிட்டு, அவளது இடத்தில் இருந்து பார்த்தால், அவளது முடிவு சரியாக படுகிறது. அவள் மீது எனக்கு துளியும் வருத்தமில்லை. நாத்திகனாக இருந்தும், அவள் நன்றாக இருக்க வேண்டும், அவள் என்னை சீக்கிரம் மறக்க வேண்டும், அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று கோவில் கோவிலாக, கடவுள் கடவுளாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்.  என்னால் எல்லாவற்றையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. இனி, அவள் நம் வாழ்க்கையின் அங்கமில்லை. எனக்கு என்று ஒரு வாழ்க்கை உள்ளது, அதனைப்பார் என என் மூளை சொல்கிறது. ஆனால், விரக்தியிலிருந்தும், சோகத்திலிருந்தும், தனிமையிலிருந்தும் மீண்டு வர என் உள்ளம் இன்னும் நேரம் கேட்கிறது” என்றான்.

அதன் பின்னர், மீண்டும் சில நாட்களுக்கு அமைதியாகிவிட்டான். எங்களது கல்லூரி நண்பன், எழிலின் திருமணம், பட்டுக்கோட்டையில் நடைபெற இருந்தது. அதற்கும் சேர்த்தே விடுப்பு எடுத்திருந்தேன். இரவில் தினமும் டீ குடிக்கச் செல்வோம்.

அப்படி ஒரு நாள் இரவில், மாம்பலம் இரயில் நிலையம் அருகே இருக்கும் டீக்கடையில் டீ குடித்துவிட்டு, அருகில் இருக்கும் எங்களது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது, ஓவென அழ ஆரம்பித்துவிட்டான். அவனை சமாதனப்படுத்தவே முடியவில்லை. அறைக்கு அவனை கொண்டு சேர்ப்பதற்கும் நாக்கு தள்ளிவிட்டது. அவன் இரவு முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தான். காலையில் நான் எழுவதைப் பார்ததும், கண்களை துடைத்துக் கொண்டான். அன்று பகல் முழுவதும், என்னிடம் எதுவும் பேசவில்லை. சாப்பிடகூட வர மறுத்துவிட்டான். இரண்டு மூன்று நாட்களுக்கு இப்படியே உணவில்லாமல், உறக்கமில்லாமல் இருந்தான். அவனின் வலி எனக்குப் புரிந்தது. அவனின் கண்ணீரில் காதல் இருந்தது.

நண்பன் எழிலின் திருமணத்திற்காக பட்டுக்கோட்டைக்குச் சென்றோம். அங்கே திருமண ஊர்வலத்தில், இவன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து எல்லோரும் வியந்தனர். ஆடினான், ஆடினான், ஊர்வலம் முடியும் வரை ஆடினான். அவனது எல்லா கவலைகளும் தீரும் வரை ஆடித்தீர்த்தான். அவனையே அவன் மறந்தான். சாலையிலேயே மயங்கிய நிலையில் சரிந்தான். அவனை அப்படியே தாங்கிச் சென்று அறையில் படுக்க வைத்தேன். நன்றாக உறங்கி, எழுந்தான். திருமணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு கிளம்பினோம்.

”பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்குச் சென்ற இரண்டாம் நாள், நான் ஊருக்கு போகிறேன்” என்றான்.

”அங்கே சென்று, நான் எம்பிஏ படிக்கப்போகிறேன்” என்றான். அவன் குரலில் தெளிவிருந்தது. மேலும், என் நண்பனின் திறமை மேல் எனக்கு நம்பிக்கையிருந்தது. அவன் ஊருக்குச் செல்லும் முன் அவனுக்கு புது மொபைல் ஒன்றைப் பரிசளித்தேன். வேண்டாம் என்றான். வற்புறுத்தவே வாங்கிக் கொண்டான். ஊருக்கு கிளம்பினான். விடுப்பு கிடைக்கையில் அவ்வப்போது சென்னைக்கு வருவான். வெற்றிகரமாக எம்பிஏ படித்து முடித்தான். சிறந்த மாணவன் என்ற கல்லூரி அவனுக்கு சான்றழித்தது. ஜப்பானிய நிறுவனமொன்றில் வேலைக்கிடைத்தது. அப்படியே படிப்படியாக வளர்ந்து மூன்றே வருடங்களில் அதன் இந்தியக் கிளையின் தலைமை அலுவலராக உயர்ந்தான்.

இவனைப் போலவே காதலில் தோற்ற பல நண்பர்களை பார்த்துவிட்டேன். காதல் தோல்வியால் அவர்களுக்கு ஏற்படும் வலியை அவர்களால் கடைசி வரை மறக்கவே முடியவில்லை. சிலர் காதல் தோல்வியிலிருந்து உடனே மீண்டு வந்துவிடுகின்றனர். காதலில் தோற்றவர்களுக்கு அதிலிருந்து மீள உடனடியாக ஒரு பற்று தேவைப்படுகிறது. சிலருக்கு அது குடும்பத்திலிருந்து கிடைகிறது, சிலருக்கு அது நண்பர்களிடமிருந்து கிடைக்கிறது. ஆனால் பலருக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்லை.

காதலில் தோற்று கிடைக்கும், அனுபவம் அலாதியானது. காதலில் தோற்ற பலரும் வாழ்க்கையில் தோற்பதில்லை. இழப்பதற்கு இனி ஏதுவுமில்லை என்ற நிலையிலேயே இவர்கள் வாழ்க்கையை துவங்குகின்றனர். வலியை மறக்க தீவிரமாக உழைக்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள். என்னதான் மீண்டும் வந்தாலும், வாழ்க்கையில் வெற்றிப்பெற்றாலும், அவர்களுடைய காதலரை மட்டும் மறக்க மறுக்கின்றனர். முதல் முத்தம், முதல் ஸ்பரிஷம், பிடித்தமான பாட்டு, உணவு, நடிகர், வாகனம், ஊர், கனவுகள் என காதலரை நினைவுபடுத்த நிறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனைத் தாண்டியே அவர்களுக்கு வெற்றி கிட்டுகிறது. காதலில் தோற்ற எல்லோரும் தங்களது முன்னாள் காதலர் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர், முக்கியமாக காதலை இழந்து பட்ட கஷ்டங்களை தங்களின் முன்னாள் காதலர் படக்கூடாது என்று வேண்டிக்கொள்கின்றனர்.

சமீபத்தில் என் நண்பனைச் சந்தித்தபொழுது, அவனிடம் அவளை எப்படி மறந்தாய் எனக் கேட்டேன்.

”மனைவியாய் நினைத்துவிட்டேன், பிறகு அவளை எப்படி தோழியாகவோ, வேறு சக மனிதராகவோ பார்க்க முடியும். அதனால், அவள் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். அவளைப்பற்றி எதும் இணையத்தில் தேடுவதில்லை. அவள் சம்பந்தப்பட்ட நபர்களை ஒதுக்கிவிட்டேன். அவளைப்பற்றிய பேச்சு வந்தாலே நான் அங்கேயிருந்து தள்ளிப்போய் விடுவேன். அவள் பற்றிய பேச்சு அப்படியே அடங்கிப்போனது” என்றான்.

ஆனால், உடைந்த குரலில் சொன்னான், ”அவள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பொருட்களையும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன். முக்கியமாக அவளின் நினைவுகள் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது. எப்போதாவது நினைத்துப்பார்பேன். அவள் எனக்கு நிறையக் கற்றுக்கொண்டுத்திருக்கிறாள். காட்டாறு போல இருந்த என்னை, ஒழுங்குப்படுத்தி தெளிந்த நதியைப் போல மடைமாற்றியவள் அவள். அவளை தூற்றுவதும் தவறு, மறப்பதும் தவறு. என்றைக்கும் அவளே என் முதல் மனைவி, தாலிகட்டாவிட்டாலும். என் வாழ்நாளில் எந்த பிரச்சனை வந்தாளும் அவளுடன் பழகிய நினைவில் ஏதாவது தீர்விருக்கும். அவள் மீது எனக்கு துளியும் கோபமில்லை. அவளுக்கு நான் சரியில்லை என நினைத்தாள். பிரிந்துவிட்டாள். ஒரு வகையில் இந்தப் பிரிவு ஏற்படக்காரணமே நான் தானே.” என்று சிறிது இடைவெளிவிட்டவன் , மீண்டும் தொடர்ந்தான்.

”தவறிழைத்தப்பொழுது ஏற்றுக் கொண்டவள், திருந்திய பிறகு, ஏற்க மறுத்தது ஏன் என்ற கேள்வி எனக்குள் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது, அதற்கு என்றைக்காவது விடை கண்டுபிடிப்பேன் என்று முடித்தான்.

கடைசியாக சிறிது ஆசுவாசப்பட்டுத்திக்கொண்டு சொன்னான், “ஒத்துக்கிறேன், மிஸ்ஸிங் தான். வலிக்கிது தான். இப்ப என்ன பண்றது? அவளால என்னை மறக்க முடியாது” என்று.

-வலிக்குது தான்… அதுக்கு இப்ப என்ன பண்றது…