ஸ்டெர்லைட் போராட்டம் – சுருக்கமான அறிமுகம்
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது, இங்கிலாந்தின் லண்டனை தலைமையாக கொண்ட வென்டேட்டா நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்திய காப்பர் உற்பத்தியில் சுமார் 35% உற்பத்தித் திறன் கொண்டது. அதாவது 4,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டது. அதனை 8,00,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த பூர்வாங்க வேலைகள் நடந்துவருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை என்றால், இந்திய அரசாங்கம், 2020ல் உலக பொதுச் சந்தையில் காப்பரை இறக்குமதி செய்யவேண்டி வரும் என ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த அளவிற்கு அரசாங்கங்களுக்கும், பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையால், பல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது, பல துணை நிறுவனங்கள் தூத்துக்குடியிற்கு வந்திருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் வருவாயில் பெரும்பங்கு ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாகவும், அதன் துணை நிறுவனங்கள் மூலமாகவுமே கிடைக்கிறது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் பல வலுவான காரணங்கள் இருக்கின்றன.
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வேண்டும் என்பது மக்களின் பல வருடக் கோரிக்கை. அதற்கான போரட்டம் அறவழியில் பல வருடங்களாக நடந்து வருகிறது. மதிமுகவின் வைகோ துவங்கி, இன்றைய மக்கள் நீதி மய்யத்தின் கமல் வரை அதற்கான தொடர் போரட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளனர். போராட்டக்களத்தை அரசியல் லாபத்திற்கான மாற்றிய வரலாறுமுண்டு.
ஆனால், இப்போது நடந்துக் கொண்டிருக்கும் போராட்டமானது, மக்களின் தன்னெழுற்சிப் போராட்டம். மக்களை தெருவிற்கு வந்துப் போராட வைத்ததற்கு மிக முக்கிய காரணம், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள். நிலத்தடடி நீர் ஆதாரம் பாளடைந்தது, நச்சுப்புகை, கேன்சர் பாதிப்புகள் என ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலை அதனை மறுக்கிறது. போராட்டக்குழுவை அழைத்து தனது ஆலையை ஆய்வு செய்யச் சொல்கிறது. ஆனால், போராட்டமோ, இந்த ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு பதில் வேண்டியும், இனியும் இந்த ஆலை இங்கே செயல்படக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியுமே.
மக்களின் இந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பிரதான கட்சிகளின் ஆதரவு பெயரளவிற்கு மட்டுமே. பணம் கொழிக்கும் அட்சய பாத்திரமாகவே அவர்களுக்கு இந்த ஸ்டெர்லைட் ஆலை இருந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் போராட்டம் நடக்கும் போதெல்லாம், இந்தியச் சந்தையில் காப்பரின் விலை சுமார் 8 முதல் 10 சதவீதம் வரை ஏற்றம் காணும் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்நாட்டின் ஜாலியன் வாலாபாத்தான தூத்துக்குடி
ஆலையை மூடக்கோரி 99 நாட்களாக அறவழியில் புதுப்புது வழிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று (மே 22, 2018 செவ்வாய்க்கிழமை) அந்தப் போராட்டம் 100வது நாளை எட்டியது. இந்த நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். காவல்துறையும் அதனை சமாளிக்கும் வகையில் 144 தடையுத்தரவு விதித்திருந்தது. அதனையும் மீறி ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு குவிந்தனர். 144 தடையை மீறியவர்களை போலீசார் தடுக்க, போராட்டக்காரர்கள் மேலும் மேலும் முன்னேற, அதனை போலீசார் மூர்க்கமாக தடுக்க முற்பட, அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அறப்போராட்டம் வன்முறையாக மாறியது. கலவரமானது, தடியடி நடந்தது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன, இறுதியாக, சொந்த நாட்டு மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
சில மணி நேரங்களில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்தும் பொழுது முட்டிக்கு கீழே சுட வேண்டும் என்ற வீதி இருக்கிறது. அதனையும் மீறி, மார்பிலும், தோளிலும், தலையிலும் குண்டுகளை சுமந்து இன்றையப் போராட்டக்களத்தில் வீழ்ந்திருக்கிறான் நம் தமிழன்.
இந்திய அளவில் அதிர்ச்சியையும் கடும் கண்டனங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர், நமது தமிழக காவல்துறையினரும், காவல்துறை அமைச்சரும் தமிழக முதலமைச்சருமான திரு. எட்டப்பாடி ( மன்னிக்கவும் ) எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்.
மனம் கதகதப்பாக இருக்கிறது.
மாலை 7 மணி நிலவரப்படி 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
ஜேக்டொ-ஜியோவும், காவல் துறையும்
சில வாரங்களுக்கு முன்பு, அதாவது மே 8 ஆம் தேதி நடந்த ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் அரசிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்படிக்கை எட்டவில்லை. அதனால், ஜேக்டோ-ஜியோ போராட்டக்குழு, சென்னையில் பேரணி நடத்த முடிவெடுத்தனர். அதனை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக காவல் துறையினர் லாவகமாக கையாண்டனர். பாராட்டும், விமர்சனமும் ஒரு சேரக் கிடைத்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கைதுப்படலம் நடந்தது. போராட்டக்கார்களின் அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது. விடிய விடிய ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அன்றைய தினம், அறிக்கப்படாத எமர்ஜொன்சி நிலவியது. எம்ஜியார், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியாரது ஆட்சிக் காலத்தில் கூட நடத்த முடியாததை நடத்திக்காட்டினர், தமிழக காவல்துறையினர்.
பெரும்பாலான, ஜேக்டோ-ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதால், போராட்டம் பெரும் வெற்றி பெறவில்லை. போராட்டம் சென்னையை தொடுவதற்கும் முன்பே முறியடிக்கப்பட்டது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்.
அப்படி ஒரு திட்டமிடல் இருந்திருந்திருந்தால், இன்றைக்கு தூத்துக்குடியில் இப்படி ஒரு அசம்பாவிதத்தை தவிர்திருக்கலாம்.
என்றைக்கும் நம் வாழ்வில் மறக்க முடியாத, மறக்க கூடாத துயரத்தை நாம் சந்தித்துள்ளோம். இது காவல் துறையினரின் மெத்தனத்தைக் காட்டுகிறது. மேலும் இது, மத்திய மாநில அரசின் ஆகப்பெரிய தோல்வி.
”எஸ்.வி.சேகருக்குத் தான் நாங்கள் பயப்படுவோம். சாமினியர்கள் என்றால் சுட்டுப் பொசுகிவிடுவோம்” என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்வதனைப் போலத்தான் இருக்கிறது இந்தச்சம்பவம். இதனையெல்லாம் பொறுத்துக் கொண்டு, செயலாற்ற முடியாலிருக்கும் தமிழனுக்கு வெட்கக்கேடு. தலைக்குனிவு.ரஜினியின் வக்காலத்து என்னவாயிருக்கும்???”ஆகப்பெரும் வன்முறை சீருடை பணியாளர்களுக்கு எதிரான வன்முறையே” என்று பொன் வார்த்தைகள் உதித்த வேங்கைமவனே…
மெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததற்கு, “அதற்கு ஏதாவது காரணமிருக்கும்” என்று சொன்ன, நேராக சிஎம் (ஹீஹீஹீ) ஆக மட்டுமே அரசியலுக்கு வருவேன் என்று கொக்கரிக்கும் நட்சத்திரமே…
இதற்கு என்ன வக்காலத்து வாங்க போகிறீர்கள்…
இது காவலர்களின் தவறல்ல… தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியின் தவறுமல்ல…
போராட்டம் நடத்திய மக்களின் தவறு… என்றா?மன்னிக்க முடியாத நாள்…தூத்துக்குடியில் சிந்திய ஒவ்வொரு துளி இரத்ததிறகும், மோடியும், அமித்ஷாவும், ஏன் ரஜினியும், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பதில் சொல்லியே ஆகவேண்டும். மக்கள் உங்களை நிச்சயம் தண்டீப்பார்கள்.இறுதியாக…தமிழ்நாட்டில் ஒரு இனப்படு கொலைக்கு இந்தியம் தயாராகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியே, இந்தத் துப்பாக்கிச் சூடு, என்பதனை நினைவில் கொள்க…!
– வீழ்வது நாமாயினும், வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்.